search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை ரெயில்"

    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
    • ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழித் தடத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்கள் அடித்துச்செல்லப்பட்டது. மண் அரிப்பும் ஏற்பட்டதால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.

    இந்த பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் கடந்த 17-ந்தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தண்ட வாளங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பணிகள் முடிவடைந்ததால் டீசல் என்ஜின் மூலம் சோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரையில் இருந்து குழுவினர் வந்து மின்சார என்ஜினை இயக்கி பார்த்தனர். பின்னர் நேற்று இறுதியாக சென்னையில் இருந்து தென்னக ரெயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் வந்து ஏ.சி. மின்சார என்ஜினில் சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முடித்தனர்.

    நெல்லையில் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் திருச்செந்தூர் சென்று திரும்பினர்.

    தண்டவாளங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருப்பதாக அதிகாரிகள் குழு தெரிவித்த நிலையில் 19 நாட்களுக்குப்பிறகு நேற்று இரவு 8.25 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அதில் ஏற்கனவே முன்பதிவு செய்த 300 பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத 150 பயணிகள் பயணம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று காலை முதல் வழக்கம்போல் அனைத்து ரெயில்களும் ஓடத்தொடங்கின. நெல்லை-திருச்செந்தூர் வழித் தடத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 7.25 மணிக்கு திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு வழக்கம்போல் 2-வது முறையாக பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. சுமார் 20 நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×